துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?

June16

நியாயத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் தராசு சின்னத்தைப் போல, ‘சரியா… தவறா…’ என்று எப்போதும் உள்ளுக்குள் கணித்துக் கொண்டே இருப்பீர்கள். கணிப்பை முகத்துக்கு நேரே சொல்லவும் செய்வீர்கள். ‘‘ஆயிரம்தான் நீங்க எனக்கு வேண்டியவங்களா இருந்தாலும், நீங்க பண்ணது தப்புதான்’’ என்பீர்கள். சுகம் தரும் சுக்கிரன் உங்களை ஆள்வதால், எப்போதும் ரசனை உணர்வுடனே எல்லாவற்றையும் பார்ப்பீர்கள். குப்பைத் தொட்டி கூட அழகாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். பரிமளப் பிரியரான நீங்கள், அதிகமான வாசனைத் திரவியங்களை உபயோகப்படுத்துவீர்கள்.

எத்தனை கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல குணம் உங்களோடு ஒட்டிப் பிறந்தது. அதேபோல அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளாக இருந்தால், நேர்மை தவறாது நடந்து கொள்வீர்கள். உங்களுக்குக் குழந்தை மனம். நண்பர்களோடு சேர்ந்து விட்டால் உலகையே மறந்து விடுவீர்கள். திருமணம், காதுகுத்து, கிரகப் பிரவேசம் என விசேஷங்கள் என்றால் குதூகலிப்பீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களைக் கூட தன் வீட்டு விசேஷம்போல் நினைத்து மகிழ்வீர்கள். பந்தி பரிமாறுவது முதல், தாம்பூலப்பை கொடுப்பது வரை பரபரப்பாக இயங்குவீர்கள்.

உங்களால் சிபாரிசு செய்யப்படும் நபர்கள் எப்போதுமே சரியாகத்தான் இருப்பார்கள். அதனாலேயே உங்கள் வழியாக யார் வந்தாலும் உடனே எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். போகும் இடங்களிலெல்லாம் மிகுந்த செல்வாக்கோடு திகழ்வீர்கள். அதே சமயம் நாணயமானவர்களின் நட்பைத்தான் விரும்புவீர்கள். தவறான நபர்கள் எவ்வளவு ஆசை காட்டினாலும், உடனே புறந்தள்ளுவீர்கள். அளவுக்கு மீறி ஆசை எழும்போது, உங்களை நீங்களே அடக்கிக் கொள்வீர்கள். எத்தனை பெரிய வேலையில் இருந்தாலும் சரிதான்… திடீரென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு வியாபாரத்தில் குதித்து விடுவீர்கள். மற்றவர்களுக்காகவே சில சமயம் நிறைய தொழில்களை தொடங்கிவிட்டு அவஸ்தைப்படுவதும் உண்டு. துலாம் லக்னக்காரர்கள் அலுவலகம் தாண்டி எப்படி சம்பாதிப்பது என்றே யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

துலாம் லக்னம் என்பது சுக்கிரனுக்கு எழுச்சி வீடு. கூட்டம், சங்கம், சபை, மேடை, எழுத்து என்று எது கிடைத்தாலும் வெளுத்து வாங்குவீர்கள். பழைய பழக்க வழக்கங்களை தற்காலத்திற்கு தகுந்ததுபோல தரவேண்டுமென்று துடிப்பீர்கள். அவமானத்தைக் கூட வாழ்க்கையின் படிக்கட்டாக மாற்றிக் கொள்ளும் விவேகம் உங்களிடத்தில்தான் உண்டு. ‘‘வெற்றிபெற வேண்டுமெனில் இந்த சிராய்ப்புகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்’’ என்பீர்கள். ரிஷப லக்னத்திற்கும் சுக்கிரன்தான் அதிபதி. ஆனால், அவர்கள் தயங்குவார்கள். நீங்களோ தயக்கமின்றி தைரியத்தோடு செயல்படுவீர்கள். எல்லோரும் வியக்கும்படி ஏதேனும் செய்ய வேண்டுமென்று குறியாக இருப்பீர்கள். ஹம்மிங் பறவைபோல எதிலேயும் ஒரு சுதந்திரமும் சுகமும் உங்களுக்குத் தேவைப்படும்.

உங்கள் சொந்த ஜாதகத்தில் சனி வலுவாக இருந்தால் நகரத்தின் மையத்திலேயே பங்களா, உயர்ரக வாகனம் என்று சொகுசாக வாழ்வீர்கள். பூர்வீக சொத்துகளோடு வாழ்வீர்கள். பிள்ளைகள் அயல்நாட்டிற்குச் சென்று செட்டில் ஆவதும் உண்டு. அதேபோல பரம்பரை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறப்பீர்கள். துலா லக்னத்தில் பிறந்த பலருக்கு முதலில் பெண் வாரிசும், பிறகு ஆண் வாரிசும் அமையும். வியாபாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமென்ற சிந்தனையால், அதிகளவிலான பயணங்களில் ஈடுபடுவீர்கள். சுக்கிரன் அளவுக்கு அதிகமான கலைத் திறனை உங்களுக்குக் கொடுப்பார். ஆணோ, பெண்ணோ… யாராக இருந்தாலும் எல்லாவற்றையும் நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள்; பரிமாறிக் கொள்வீர்கள். நட்பாக இருந்து, காதலாக மாறி, வாழ்க்கைத்துணை அளவுக்கு உயரும். இதனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டு வாழ்க்கைத்துணையும் அமைந்து விடுவதுண்டு. லக்னத்திலிருந்து எட்டாம் இடத்திற்குரிய சுக்கிரனே உங்கள் லக்னாதிபதியாக வருவதால் இருந்து, இழந்து, தவித்து, ஏற்றத்தைப் பெறுபவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையின் நடுப்பகுதி ராஜயோக காலமாக அமையும்.

உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் உங்களை மறந்தாலும், சனி, புதன், சந்திரன் மூவரும் மறக்காமல் நல்லதையே செய்வார்கள். சனி பகவான் உங்கள் லக்னத்திலேயே உச்சமாகிறார். மேலும் அவர் சுகாதிபதியும், பூர்வபுண்ணியாதிபதியும் ஆவார். அதாவது தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும், மழலை வரத்தைத் தருபவராகவும் இருக்கிறார். எனவே, ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ என்பதுதான் உங்களின் அடிப்படை ஆன்மிகமாக இருக்கும். லக்னத்திற்கு நான்காம் இடமாக சனி வருவதால் சொந்த பந்தம், உற்றார் உறவினர் என்று எல்லோரையும் அரவணைப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமான புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் சனி வருவதால், சூட்சும புத்தி அதிகமாக இருக்கும். ‘‘குழந்தைங்க எதுல ஆர்வமா இருக்காங்களோ அதுலயே வரட்டும்’’ என்று விட்டுப் பிடிப்பீர்கள். பொதுவாக சனி பகவான் அடுத்த தலைமுறை மீது அதிகளவு அக்கறை மிகுந்தவராக இருக்கிறார். எனவே, தன்னைவிட பிள்ளைகள் சிறந்து வளர வேண்டுமென்று நினைப்பீர்கள்; அதுபோல வளர்க்கவும் செய்வீர்கள். சுகாதிபதியாக சனி வருவதால், விலையுயர்ந்த புது வாகனத்தில் வலம் வருவீர்கள்.

உங்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்… அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால், பலன்களை அள்ளி வீசுவார். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள், 8, 17, 26 ஆகிய தேதிகள், சனிக்கிழமை போன்றவை உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தரும். உங்கள் ஜாதகத்திலுள்ள சனியை பலப்படுத்த எள் உருண்டை அடிக்கடி சாப்பிடுங்கள். அடிபட்ட பறவைக்கு உதவுங்கள். புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்கள் வையுங்கள். மாற்றுத் திறனாளிகளை தேடிச் சென்று உதவுங்கள். நீங்கள் நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருந்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள். சாய்ந்த மரத்தை நிமிர்த்த முடியுமா என்று பாருங்கள். முடிந்தபோதெல்லாம் கடலுக்கருகே சென்று தனிமையில் அமர்ந்து கொள்ளுங்கள். அருநெல்லிக்காய், தக்காளி, எள்ளுருண்டை, நல்லெண்ணெய், மாங்காய், கத்தரிக்காய், அத்திக்காய், கருணைக் கிழங்கு. சேப்பங் கிழங்கு, கருப்பு திராட்சை என்று உணவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களின் லக்னாதிபதியான சனிக்கு புதன் நெருக்கமான நண்பராக வருகிறார். மேலும், உங்களின் பாக்யாதிபதியே புதன்தான். நண்பர்களுக்காக சிலவற்றை இழந்து தியாக சொரூபியாக இருப்பீர்கள். உங்களை விட உங்கள் தந்தையார் மதிநுட்பம் வாய்ந்தவராகவும், விட்டுக் கொடுக்கும் குணமுள்ளவராகவும், நகைச்சுவை உணர்வு நிரம்பியவராகவும் இருப்பார். பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் கூட அனுபவப் படிப்பில் முதல்நிலை வகிப்பவராக இருப்பார். இந்த புதன் செவ்வாயோடு சேர்ந்திருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ, அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ கொஞ்சம் அவஸ்தைகள் இருக்கும். இந்த புதன் கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால் அலைக்கழிப்புகள் அதிகம் இருக்கும். இவையெல்லாவற்றையும் தாண்டி புதன் உதவ முயற்சிப்பார். ராசியிலிருந்து ஒன்பதாம் இடமென்பது தந்தையாரைக் குறிக்கும். அதற்கு புதன் அதிபதியாக வருவதால், தந்தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் உங்களுக்கு மட்டுமே அர்த்தம் புரியும். புத்திக்குரியவரான புதன் தந்தை ஸ்தானத்திற்கு உரியவராக வருவதால், தந்தையாரைப் பற்றிய வியப்பு இருக்கும். அல்லது ஏதேனும் ஒருவிதத்தில் தந்தையாரை முந்த பார்ப்பீர்கள். உங்கள் பெற்றோர் காசு, பணத்தை விட புண்ணியத்தை அதிகமாக உங்களுக்காகச் சேர்ப்பார்கள். அது உங்கள் வாழ்க்கையை மலர வைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் புதன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவரை பலப்படுத்த நடைமுறை வாழ்வில் சிலவற்றை மேற்கொள்ளுங்கள். உணவில் பச்சைப் பயறு, கோவைக்காய், கொய்யாப்பழம் சுண்டைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், வாழைத்தண்டை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றல், கற்றுக் கொடுத்தல் – இரண்டையும் மறக்காது செய்யுங்கள். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு உதவுங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். திருநங்கைகளுக்கு இயன்ற அளவு உதவுங்கள். புதன் தசை, புதன் புக்தி, புதன் அந்தரம், ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சந்திரன். உங்களுக்கு ஜீவன, தொழில் ஸ்தான கர்மாதிபதியாக விளங்குகிறார் சந்திரன். நீங்கள் வளர்பிறையில் பிறந்து, ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால் சுகமான வாழ்க்கை அமையும். உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்திற்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளில் கால்பதிப்பீர்கள். எதிலும் வசீகரமும், கற்பனையும் கலந்தே காரியமாற்றுவீர்கள். சந்திர தசை, அல்லது வேறெந்த தசை நடந்தாலும் அதில் வரும் சந்திர புக்தி, திங்கட் கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகள் என்று சந்திரனின் ஆதிக்கமுள்ள அனைத்து நேரங்களிலும் உங்களுக்கு நன்மையான செயல்களே நடைபெறும். உணவில் முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி, தர்ப்பூசணி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால் அம்மாவின் அசையாச் சொத்து, அறிவுச் சொத்து எல்லாமுமே உங்களை வந்து சேரும். அதே சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ, கிரகயுத்த அவஸ்தையை அடைந்திருந்தாலோ, சூரியனால் ஏற்படக் கூட அஸ்தங்க அவஸ்தையை பெற்றிருந்தாலோ… எதையுமே எளிதாக அடைய முடியாமல் அவஸ்தைப்படுவீர்கள்.

எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரிதான்… தெய்வம் எனும் சக்தியை அடிபணியுங்கள். குறிப்பாக புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை எப்போதும் வணங்குங்கள். அதிலும் காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை அவ்வப்போது தரிசித்துவிட்டு வாருங்கள். திருப்பவள, பச்சை வண்ண பெருமாளின் அருளால், புதன் உங்களுக்கு பிரமாண்டமான வாழ்வைத் தருவார்.

Email will not be published

Website example

Your Comment:Fees Details